விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த சிறுகடம்பூர் அருந்ததியர் காலனியைச் சேர்ந்த சின்னமுத்துவின் மகன் ஞானப்பிரகாசம் (68). கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், நேற்று காலை உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உறவினர்கள் நேற்று மாலை ஞானப்பிரகாசத்தின் உடலை அடக்கம் செய்ய அங்குள்ள இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது, அந்த பகுதியில் புறவழிச்சாலை பணிகள் நடந்ததால் அவரது உடலை அங்கு அடக்கம் செய்ய மறுத்துவிட்டனர்.
இதையடுத்து அருகில் இருந்த புறம்போக்கு நிலத்தில் ஞானப் பிரகாசத்தின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அந்த இடத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேல் விவசாயம் செய்து வரும் நபர், உடலை அடக்கம் செய்வதற்கு இடம் தர மறுத்துவிட்டார்.