தமிழ்நாடு முழுவதும் உள்ள 16 சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே புதுவை மாநில எல்லையில் உள்ள திருச்சிற்றம்பலம் கூட்ரோடு போக்குவரத்து சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி யுவராஜ் தலைமையிலான காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, வாகனங்களுக்கான வரி வசூல், ஆவணங்களை சோதனையிட்டு விசாரனை மேற்கொண்டனர். இதில், தற்போதுவரை ரூ. 16 ஆயிரம் அளவில் கணக்கில் வராத பணம் சிக்கியதாக தெரிகிறது. தொடர்ந்து சோதனை நடந்து வருவதால் முடிந்த பிறகே விவரங்கள் தெரிவிக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில், தமிழ்நாடு கேரள எல்லைப் பகுதியான புளியரையில் உள்ள சாலை போக்குவரத்து அலுவலக சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி எஸ்கால் தலைமையிலான அலுலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின்போது, தினந்தோறும் தமிழ்நாட்டில் கேரளாவிற்கு செல்லும் வாகனங்கள் குறித்தும் முறையாக அரசு நிர்ணய கட்டணம் வசூல் செய்வது குறித்தும் ஆய்வு செய்தனர். பின்னர் கணக்கில் வராத 48 ஆயிரத்து 270 ரூபாய் ரொக்கத்தை அலுவலர்கள் கைபற்றி வட்டார போக்குவரத்து துறை அலுவலர் நீலவேணி மீது வழக்குப்பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி வட்டார போக்குவரத்து அலுவலக சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத் துறையினர், மதுரை துணை கண்காணிப்பாளர் சத்யசீலன் தலைமையில் ஆய்வாளர் கீதா உள்பட எட்டு பேர் கொண்ட குழுவினர் சுமார் 5 மணி நேரம் சோதனை நடத்தினர். அதில், அதிகாலை 4 மணியில் இருந்து 9 மணிவரை 27 வாகனங்கள் மட்டும் அனுமதி சீட்டு பெற்றதாகவும், இவற்றில் கணக்கில் வராத பணம் 5 ஆயிரத்து 500 ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்தனர். இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலக அலுவலர்களுடன் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்த உள்ளனர்.
இதையும் படிங்க:அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிரடி!