திடீரென ஊருக்குள் புகுந்த கடல் நீர் விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரி எல்லையை ஒட்டி அமைந்துள்ள மரக்காணம் அடுத்த கடலோரப் பகுதிகளான கோட்டக்குப்பம் கீழ்புத்துப்பட்டு, புதுக்குப்பம், அனிச்சங்குப்பம், முதலியார்குப்பம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் அமைந்துள்ள பிள்ளைச்சாவடி, கணபதி செட்டிக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கடல் சீற்றம் அதிகரித்து அலைகளின் உயரம் சற்று உயர்ந்து காணப்பட்டது.
இதனால் கடற்கரையில் இருந்து கடல் நீரானது 200 மீட்டர் துாரத்திற்கு மீனவ கிராம பகுதிக்குள் புகுந்தது. இதனைக் கண்டு அச்சம் அடைந்த கடலூர் மீனவர்கள், கடற்கரை ஓரம் வைக்கப்பட்டிருந்த தங்களின் விசைப்படகு, படகு, கட்டுமரம் மற்றும் மீன் பிடிக்கும் வலைகள் உள்ளிட்ட உபகரணப் பொருட்களை அவசரம் அவசரமாக மேடான பகுதிகளுக்கு எடுத்துச் சென்றனர்.
மேலும், கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலை போன்று ஏதேனும் பேராபத்து ஏற்படுமோ என தங்களின் உடைமைகள் உடன் தாங்கள் வசித்த குடியிருப்புகளை விட்டு மேடான பகுதிக்குச் சென்றனர். இதனிடையே, இது குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் கடலோரப் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
மேலும் இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், "மரக்காணம் ஒட்டி அமைந்துள்ள 19 கடலோரப் பகுதிகள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் நேற்று காலை 10 மணியளவில் திடீரென உருவான கடல் அலையானது ஒரு முறை மட்டும் பெரிதளவில் 100 மீட்டர் அளவிலான பெரிய அலையாக எழுந்தது.
இதனை அடுத்து மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் கடல் நீர் உட்புகுந்தது. இதனால் எந்த வித பாதிப்பும் ஏற்படாது. மேலும், உலகிலேயே அதிகமாக கடலின் நடுப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு ஏற்படும் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இந்தோனேஷியா நாட்டில் சில நாட்களுக்கு முன்பு கடலில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக அதனுடைய தாக்கமானது வங்காள விரிகுடா கடற்கரையை ஒட்டிய தாழ்வான பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
எனவே, கடல் நீரானது மக்கள் வசிக்கும் பகுதிகளில் நுழைந்து குட்டையாக தேங்கி உள்ளது. இதனை உடனடியாக சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, கடற்கரையோர மக்கள் இதனால் அச்சப்படத் தேவையில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கீழடி 9ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை 183 பொருட்கள் கண்டெடுப்பு - தொல்லியல் துறை தகவல்!