விழுப்புரம்:திரு.வி.க. வீதியில் செயல்பட்டு வரும் மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 4,000 மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக சசிகலா என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் காலாண்டுத் தேர்வு தொடங்குவதற்கு சில நாட்கள் முன் பள்ளியில் நடந்த தமிழ்தாய் வாழ்த்து கூட்டத்தின்போது, “காலாண்டுத் தேர்வில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவிகளுக்கு சிறப்பான பரிசு ஒன்று காத்திருக்கிறது. எனவே மாணவிகள் அனைவரும் நல்லமுறையில் படியுங்கள்’ என தலைமையாசிரியர் அறிவுறுத்தி உள்ளார்.
இதனையடுத்து நடைபெற்ற காலாண்டுத் தேர்வின் முடிவில், ஜி.ஆர்.பி. தெருவைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி லோகிதா, 600-க்கு 581 மதிப்பெண் பெற்று முதல் மாணவியாக திகழ்ந்துள்ளார். தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து, முதல் மதிப்பெண் பெற்ற மாணவி லோகிதாவை, நேற்று (அக் 27) தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர வைத்து அவருக்கு ஒரு நாள் தலைமை ஆசிரியர் பொறுப்பை வழங்கி உள்ளனர்.