விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வடகுரும்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி (50). கூலி வேலை செய்து வரும் இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். கூலித்தொழிலாளி சக்கரவர்த்தியின் மகன் மணிகண்டன் நல்ல முறையில் படித்ததால் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பான மதிப்பெண் பெற்றார். இதைத் தொடர்ந்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த 2014ஆம் ஆண்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மணிகண்டன் முதலாம் ஆண்டு படிக்கும் பொழுது தனது குடும்பத்தினர், உறவினர்கள் உதவியோடு கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் ஆகியவற்றை கட்டி படித்து வந்தார்.
ஆனால், தற்போது இரண்டாம் ஆண்டிற்கான கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் செலுத்த பணம் இல்லாத நிலையில் இருந்து வந்துள்ளார். இதனால், மணிகண்டன் 'தனது கல்வியைத் தொடர தனக்குப் பணம் தந்து உதவுங்கள்' என என சமூக நல அமைப்பினரை நாடியுள்ளார். பின்பு, இது குறித்த தகவல் வாட்ஸ்அப், சமூக வலைதளங்களில் பரவியது.