தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி அறிவித்த உடனேயே, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதன் காரணமாக 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டுசெல்பவர்கள் உரிய ஆவணங்களை உடன் வைத்திருக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த ஆலத்தூர் கூட்டுச் சாலைப் பகுதியில் வேளாண் துறை அலுவலர் சரவணன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மதுராந்தகத்தைச் சேர்ந்த சுரேஷ் (38) என்பவர் மரக்காணத்திலிருந்து திண்டிவனம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். சுரேஷை நிறுத்தி சோதனையிட்ட தேர்தல் பறக்கும் படையினர், அவரிடமிருந்து உரிய ஆவணங்களில்லாத ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல்செய்தனர்.
பறிமுதல்செய்யப்பட்ட பணம் தேர்தல் உதவி அலுவலர்கள் உஷா, சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலையில் திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க :தனிமனித தாக்குதல் இல்லாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது - கமல்ஹாசன்