விழுப்புரம்:மணல் அரிப்பு காரணமாக, விழுப்புரம் அருகே பிடாகம் என்ற இடத்தில் வாகன போக்குவரத்து மற்றும் தொடர்வண்டி போக்குவரத்து பாலங்கள் ஆகியவற்றின் தூண்களின் அடித்தளங்கள் கடுமையாக அரிக்கப்பட்டு வருகின்றது. தென்பெண்ணையாற்றில் நடக்கும் மணல் கொள்ளையால் மணல்மட்டம் குறைந்து பாலங்களின் தூண்களுக்கு கீழ் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
தென்பெண்ணையாற்றில் நடக்கும் மணல் கொள்ளையால் மணல்மட்டம் குறைந்ததன் காரணமாக, பாலங்களின் தூண்களின் கீழ் பகுதியில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள இரு பாலங்களின் தூண்களும் மணல்மட்டத்திற்கு கீழே 8 மீட்டர் ஆழத்திற்கு அமைக்கப்பட்டிருப்பதால் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாது என்று பொதுப்பணித்துறை சார்பில் கூறப்படுகிறது. ஆனால், இப்போதே தூண்களைச் சுற்றிலும் 4 மீட்டர் ஆழத்திற்கு மணல் அரிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த மணல் கொள்ளை கட்டுப்படுத்தாவிடில், இன்னும் சில மாதங்களில் தூண்களின் அடிப்பகுதி வரை மணல் அரிப்பு ஏற்பட்டு விடக்கூடும் என கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, இந்த பாலத்தின் உறுதி தன்மையில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதியினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மற்றொருபுறம் மணல்மட்டம் குறைந்ததால் ஆற்று நீர் கால்வாய்களில் பாய முடியாத நிலையால் பாசனமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் “மணல் அரிப்பின் காரணமாக பாலங்களின் அடித்தளம் பாதிக்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த பிப்ரவரி - மார்ச் மாதங்களிலும் பிடாகம் பகுதியில் பாலத்தின் தூண்களுக்கு கீழ் கடுமையான மணல் அரிப்பு ஏற்பட்டது. அதை சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து தூண்களின் அடித்தளங்களைச் சுற்றி மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன. ஆனால், அடுத்த சில வாரங்களில் மணல் மூட்டைகள் அடித்துச் செல்லப்பட்டு விட்ட நிலையில், மீண்டும் தூண்களுக்கு கீழ் மணலரிப்பு ஏற்பட தொடங்கியுள்ளது. மணல் குவாரிகள் தான் இத்தனை பாதிப்புகளுக்கும் காரணம் என்று தெரிந்தும் அவற்றை மூட மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார்.
தென்பெண்ணை ஆற்றில் மணல் கொள்ளையால் ஏற்பட்ட பாதிப்புகள் போதாது என்று ஏனாதிமங்களம் என்ற இடத்தில் புதிய மணல் குவாரி அமைக்க தமிழக அரசு அண்மையில் அனுமதி கொடுத்திருக்கிறது. தமிழ்நாட்டில் அண்மையில் அமைக்கப்பட்ட 25 புதிய மணல் குவாரிகளில் தென்பெண்ணை ஆற்றில் ஏனாதிமங்களத்தில் அமைக்கப்பட்டுள்ள மணல் குவாரி தான் மிகவும் பெரியதாகும். அந்த மணல் குவாரியில் மட்டும் ஒரு லட்சம் யூனிட் மணல் அள்ள சட்டப்பூர்வ அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள 6 மணல் குவாரிகள் அள்ளப்படும் ஒட்டுமொத்த மணலை விட அதிகமாகும்.