விழுப்புரம் மாவட்டம் சித்தால் கிராமத்தில் அரசுப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் தங்கள் பகுதிகளிலிருந்து பள்ளிக்கு வருவதற்கு அரசுப் பேருந்தினையே பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக அரசுப்பேருந்து சரிவர இயங்காத காரணத்தினால் மாணவர்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து இன்று காலை பள்ளி செல்வதற்கு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து வராததையடுத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் ரிஷிவந்தியம் காவல் நிலையம் முன்பு சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.