விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த மணலூர்பேட்டை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதி காட்டுக்கோவில். இந்தப் பகுதியில் நேற்றிரவு மணலூர்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் அன்பழகன் தலைமையிலான காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு லாரியை சோதனை செய்தனர். சோதனையில் லாரியின் ஓட்டுனர் சரவணன், கிளினர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதை தொடர்ந்து, சந்தேகமடைந்த காவல் துறை லாரியை சோதனை செய்தனர். அப்போது லாரியில் 16 டன் தமிழ்நாடு அரசின் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தெரியவந்தது.
காவல் துறையினர் ஓட்டுநர், கிளினர் ஆகிய இருவரிடமும் நடத்திய விசாரணையில், ஓட்டுநர் சரவணன்(39) வேலூர் மாவட்டம் கொசப்பேட்டையை சேர்ந்தவர் என்றும், கிளினர் ராமச்சந்திரன் (49) வேலூர் மாவட்டம் அரியூர் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. மேலும் இவர்கள் திருக்கோவிலூர் அருகே உள்ள சந்தப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஷாஜகான் என்பவரிடம் இருந்த ரேஷன் அரிசியை வேலூர் மாவட்டம் சுரேஷ் என்பவருக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.