விழுப்புரம் அருகேயுள்ள முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டுவருகிறது. இங்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி என்பவர் கடந்த நான்கு நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதற்கிடையே லட்சுமியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக அவரது மகன் ராமமூர்த்தி என்பவர் நேற்றிரவு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு மருத்துவம் பார்த்துக்கொண்டிருந்த முகுந்தன் என்ற பயிற்சி மருத்துவருக்கும், ராமமூர்த்திக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அச்சமயத்தில் பயிற்சி மருத்துவர் முகுந்தனை, ராமமூர்த்தி தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ராமமூர்த்தி மீது விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.