விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள நரசிங்கனூர் கூட்டுச் சாலையில் நேற்றிரவு காவல்உதவி ஆய்வாளர் நடராஜன் தலைமையில் காவல் துறையினர் வழக்கம்போல் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த TN-16-NK-4527 என்ற பதிவுஎண் கொண்ட மினிவேனை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர். அதில், எவ்வித அனுமதியும், உரிமமுமின்றி 48 மதுபாட்டில்கள் கொண்ட 42 பெட்டிகளில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் பகுதியைச் சேர்ந்த அய்யனார் (42) என்பவரை காவல் துறையினர் கைது செய்து கடத்திவரப்பட்ட மதுபாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய மினிவேன் உள்ளிட்டவற்றையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.