கரோனா வைரஸ் பெருந்தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ளும்விதமாக மக்கள் ஊரடங்கு மார்ச் 22ஆம் தேதி நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து கரோனா தொற்று பாதிப்பு பரவலைத் தடுக்க களத்தில் தொய்வின்றி உழைத்துவரும் மருத்துவர்கள், செவிலியர், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர், ஊடகத் துறையினருக்கு நன்றி தெரிவித்து உற்சாகப்படுத்தும்விதமாக வேலூர் மாவட்ட தீயணைப்புத் துறை சார்பில் தீயணைப்பு வாகனங்கள் மூலம் சைரன் ஒலிக்கப்பட்டது.
அதேபோல் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள குடியிருப்புவாசிகள் அவரவர் வீடுகளின் மாடியிலும், வெளியிலும் நின்று கைகளைத் தட்டி, மணி அடித்து ஒலி எழுப்பி நன்றி தெரிவித்தனர்.
கரோனா எதிரொலியின் மூன்றாம் கட்ட நிலையை எதிர்கொள்ள இந்தியா தயாராகிவரும் பொருட்டு மார்ச் 22ஆம் தேதி காலை 7 மணிமுதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் மக்கள் ஊரடங்கை கடைப்பிடித்தனர்.
இதையடுத்து சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே கடைகள் ஏதும் திறக்கப்படாமல் மூடப்பட்டன. ஊரடங்கு உத்தரவை மக்கள் ஏற்று வீட்டிலேயே தங்கியதால் சாலை முழுவதும் வெறிசோடிக் காணப்பட்டன.