கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள சந்தப்பேட்டையில் வசிப்பவர் ஃபிராங்கிளின் என்பவரது இளைய மகன் ரீகன் ஃபிராங்கிளின்(32). இவர் திருக்கோவிலூரில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் அவரது தந்தையின் மறைவுக்குப் பின் கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட வேலையை செய்து வருகிறார்.
இவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், இந்த நிலையில் ரீகன் நேற்று இரவு தமது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரீகனின் உடலை உடற்கூறாய்விற்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த நிலையில் ரீகன் தற்கொலை செய்வதற்கு முன் கடிதம் ஒன்றை எழுதி வைத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதில் அவரது தங்கைக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்ததாகவும், ஆனால் அவர் வாழாமல் வீட்டிற்கு வந்து விட்டதாலும் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னைகள் வருவதாகவும் கூறி தற்கொலை செய்யப்போவதாக எழுதி வைத்திருந்தது தெரியவந்துள்ளது.