'திமுக வெற்றிக்கு உதயநிதி காரணம்; சி.வி. சண்முகத்தின் அண்ணனுக்கு நான் வேலை வாங்கி தந்தேன்' விழுப்புரம்:அத்தியூர் திருவாதி கிராமத்தில், நேற்று (டிசம்பர் 25), திமுக முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவை சிறப்பிக்கும் விதமாக பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது, “அரசியலில் வாரிசு வரக்கூடாது என்று யார் சொன்னது. எல்லோர் வீட்டிலும் அரசியல் வாரிசுகள் உருவாகிறார்களா? 10% மட்டும் தான் அரசியலில் வாரிசுகள் ஈடுபடுகிறார்கள். அரசியலில் ஆர்வம் உள்ளவர்கள் மட்டுமே அரசியலில் ஈடுபடுகிறார்கள்.
அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் அரசியலில் ஈடுபடுவது எந்த தவறும் இல்லை. உதயநிதி ஸ்டாலினின் தீவிர பிரசாரம் தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் பெரும்பான்மையாக திமுகவை வெற்றி பெற வைத்தது.
அதுதெரியாமல் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஒரு அமைச்சரை பார்த்து, கால் தூசுக்கு சமம் என்றெல்லாம் பேசி வருகிறார். இது நாகரிகமான பேச்சு அல்ல. நான் அமைச்சராக இருக்கும்பொழுது இதே சி.வி.சண்முகம் தன்னுடைய அண்ணனுக்கு வேலை கேட்டு என்னிடம் வந்தார். நான் தான் வேலை வாங்கி கொடுத்தேன்.
சி.வி.சண்முகத்தின் அப்பா வேணுகோபால் எம்.பி.ஆக இருந்ததால்தான் சி.வி.சண்முகமும் அரசியலுக்கு வர முடிந்தது. அப்பொழுது என் மீது மக்களுக்கு இருந்த கோபம் காரணமாக நான் தோற்கடிக்கப்பட்டேன். ஜெயலலிதா புண்ணியத்தில் சி.வி. சண்முகம் அமைச்சரானார்.
கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலாகட்டும்; சட்டமன்றத்தேர்தல் ஆகட்டும் இந்த தேர்தல்களில் தீவிர பிரசாரம் செய்தார், உதயநிதி ஸ்டாலின். அவருடைய பிரசாரம் தான் திமுகவுக்கு பெரிய அளவு வெற்றியைத் தேடித் தந்தது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோட்சேக்களின் வாரிசுகளுக்கு காந்தி வாரிசுகளின் பேச்சுகள் கசக்கத்தான் செய்யும் - மு.க. ஸ்டாலின்