விழுப்புரம்:கிழக்கு கடற்கரை சாலைப்பகுதியான மரக்காணம் அருகே மீனவ கிராமமான அனுமந்தை அமைந்துள்ளது. இங்கே அமைந்துள்ள கடற்கரையோரத்தில் 50 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டைச் சேர்ந்தவரின் உடல் கரை ஒதுங்கியது. வெளிநாட்டைச் சேர்ந்தவரின் உடல் கடற்கரையோரம் ஒதுங்கி இருப்பதை கண்ட உள்ளூர் மீனவர்கள், மரக்காணம் சரக காவல் நிலையம் மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மரக்காணம் காவல் துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்த நபரின் முதுகு முழுவதும் பச்சை குத்தியிருக்கிறார். இதனை வைத்து இவர் யார் என்பது குறித்த விவரங்களை சேகரிக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக ஆரோவில் பகுதி சர்வதேச சுற்றுலா நகரமாகும், இங்கு வெளிநாட்டவர் அதிகமாக வசித்து வரும் நிலையில் அருகே உள்ள மீனவ கிராமமான தந்திராயன் குப்பம் பகுதியில் உள்ள கடலில் குளிக்கும் போது அலையல் சிக்கி இறந்தாரா அல்லது அண்டை மாநிலமான புதுச்சேரி கடல் பகுதியில் குளிக்கும்போது தவறுதலாக யாரேனும் கடல் அலையில் சிக்கி இறந்திருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.
மேலும், கடலில் மிதந்த வெளிநாட்டவரின் உடலானது கடல் அலையின் திசைக்கேற்ப மரக்காணம் பகுதியில் கரை ஒதுங்கி இருக்கலாம் எனவும் அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக இறந்திருப்பாரா என்கிற கோணத்தில் காவல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:தென்காசியில் நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்ற இளைஞர் உயிரிழப்பு!