விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றும் காவலர்களை மாதமிருமுறை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்குவதை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் கடந்த இரு வாரங்களில் திருக்கோவிலூர் அருகே உள்ள அதண்டமருதூர் கிராமத்தில் பிறந்து 17 நாட்களே ஆன பெண் குழந்தையைக் கொன்று ஆற்றில் புதைத்த சம்பவத்தில், குற்றவாளி வரதராஜ் மற்றும் கொலைக்குத் தூண்டுதலாக இருந்த துரைக்கண்ணு ஆகிய இருவரையும் கைது செய்த திருக்கோவிலூர் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் மற்றும் காவலர்கள் என 7 பேருக்கும்;
கண்டமங்கலம் அருகே உள்ள பெரியபாபு சமுத்திரத்தில் நிலத்தகராறு காரணமாக 50 வயது பெண்மணியைக் கொலை செய்த குற்றவாளியை 24 மணி நேரத்தில் கைது செய்த கண்டமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள், முதல் நிலை காவலர்கள் மற்றும் மோப்ப நாய் கையாளுபவர்கள் 16 பேர் என மொத்தம் 23 பேரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பரிசுகள் வழங்கி பாராட்டி கௌரவித்தார்.