ஊரடங்கு உத்தரவு காரணமாக அரசு டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால், மது கிடைக்காமல் மது பிரியர்கள் தவித்து வருகின்றனர்.
இதனை பயன்படுத்தி ஆங்காங்கே சிலர் கள்ளச் சாராயம் காய்ச்சி அதிக விலைக்கு விற்றுவருகின்றனர். அவர்களை பிடிப்பது காவல் துறையினருக்கு பெரும் சவாலாக இருந்துவருகிறது. இதன் தொடர்ச்சியாக, விழுப்புரம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரபாண்டி கிராம மலை பகுதியில் சமூக விரோதிகள் சிலர், கள்ளச் சாராயம் காய்ச்சி அதிக விலைக்கு விற்பதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் ரேணுகாதேவி தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு மலைப்பகுதியில் உள்ள புதரில் சுமார் 1000 லிட்டர் கள்ளச் சாராய ஊறல் இருப்பதைக் கண்டறிந்தனர்.
ஊறலை அழித்த காவல் துறையினர் இது குறித்து விசாரணை செய்ததில் அப்பகுதியைச் சேர்ந்த குரு என்பவர் ஊறல் வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, குரு தலைமறைவாகிவிட்டார். பின்னர், அங்கிருந்த 1000 லிட்டர் சாராய ஊறலை அழித்த காவல் துறையினர், தப்பியோடிய குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கள்ளச்சாராயம் தயாரித்த 4 பேர் கைது