விழுப்புரம்: அரசு உறுதிமொழி குழுவின் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் (ஆக.24) ஆய்வு மேற்கொண்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும், சட்டமன்ற அரசு உறுதிமொழி குழுவின் தலைவருமான வேல் முருகன் நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள அரசினர் உறுதிமொழிகள் தொடர்புடைய பல்வேறு திட்டங்களை பார்வையிட்டார்.
அதை முடித்த பின்னர் மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை உயர் அதிகாரிகள் பங்கேற்புடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள ஒட்டுமொத்த உறுதிமொழிகள் குறித்தும் துறைவாரியாக ஆய்வு மேற்கொண்டு உரிய உத்தரவுகளை பிறப்பித்தார்.
அந்த கூட்டத்தில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், குழு உறுப்பினர்களான மோகன், ராமலிங்கம், அருள், ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்கள் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களான புகழேந்தி, லக்ஷ்மணன், சிவக்குமார் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பழனி (IAS) கூடுதல் ஆட்சியர் சித்ரா விஜய், துணை ஆட்சியர் கட்டா ரவி தேஜா, மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஸ்ரீதரன், பேரவைச் செயலாளர், பேரவை துணைச் செயலாளர், பிரிவு அலுவலர்கள் மற்றும் மாவட்டத்தின் அனைத்து துறை உயரதிகாரிகளும் பங்கேற்றனர்.
இதன் தொடர்ச்சியாக விழுப்புரம் புதியபேருந்து நிலையம் வீடுர் அணை, திண்டிவனம், கூட்டேரிப்பட்டு பகுதிகளில் முடிவுற்ற, முடிவுறா பணிகளை ஆய்வு செய்தனர். விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்துவிட்டு விக்கிரவாண்டி சுங்கச்சாவடி வழியாக வீடுர் அணையில் தூர் வாரப்பட்ட பணிகளை ஆய்வு செய்ய சென்றபோது சுங்கச்சாவடியில் வேல் முருகன் திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது சென்ற ஆண்டு பொது கணக்கு குழு சார்பில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு 24 மணி நேரமும் இலவசமாக செல்லக்கூடிய வகையில் ஒரு பாதையை ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற விதியின்படி அது இங்கே நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்று உத்தரவிட்டிருந்தது. ஆனால் இன்று வரையில் அந்த உத்தரவு நடைமுறைப் படுத்தப்படவில்லை.