விழுப்புரம் அருகேயுள்ள வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயப்பிரதா. இவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் பூந்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்ற நபருக்கும் கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பெண்குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு வீட்டிலிருந்து சென்ற சுரேஷ் மாயமானார். இதையடுத்து உறவினர்களுடன் சேர்ந்து சுரேஷை தேடிய ஜெயப்பிரதா, இதுத்தொடர்பாக விழுப்புரம் தாலூகா காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார்.
மனைவி, குழந்தைகளை தவிக்கவிட்டு திருநங்கையுடன் இரண்டாவது திருமணம்!
விழுப்புரம்: மனைவி, குழந்தைகளை தவிக்கவிட்டு திருநங்கையுடன் குடித்தனம் நடத்தி வந்த நபர், டிக்டாக் செயலி மூலம் கையும், களவுமாக மாட்டிய சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மூன்று வருடங்களாக விழுப்புரம் போலீஸார் சுரேஷை தேடிவந்த நிலையில், சமீபத்தில் டிக்டாக் செயலியில் மாயமான சுரேஷ் போன்ற உருவத்தில் இருக்கும் நபர், திருநங்கையுடன் சேர்ந்து ஜோடியாக வீடியோ பதிவிட்டுள்ளதை ஜெயப்பிரதாவின் உறவினர் ஒருவர் பார்த்துள்ளார். இந்த வீடியோக்களை ஜெயப்பிரதாவிடமும் காண்பித்துள்ளார். வீடியோவில் இருப்பது சுரேஷ் தான் என்பதை உறுதி செய்த ஜெயப்பிரதா, இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைத்திலும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆய்வாளர் ராஜன், உதவி ஆய்வாளர் பிரகாஷ் ஆகியோர் விழுப்புரம் திருநங்கைகள் நலஅமைப்பிடம் நடத்திய விசாரணையில், வீடியோவில் இருக்கும் திருநங்கை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து திருநங்கைகள் உதவியுடன் ஓசூர் சென்ற போலீஸார், திருநங்கையை திருமணம் செய்து கொண்டு தனிக்குடித்தனம் நடத்தி வந்த சுரேஷை கண்டறிந்தனர்.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தபோது, திருநங்கையுடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அவரையே திருமணம் செய்து கொண்டதாகவும் சுரேஷ் தெரிவித்துள்ளார். இதையடுத்து சுரேஷை மீட்டு வந்த போலீஸார், அவர் மனைவி ஜெயப்பிரதாவிடம் சேர்த்து வைத்தனர்.