முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு 29 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரை விடுதலை செய்யலாம் எனத் தமிழ்நாடு அரசு, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது.
இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையிலும் இது தொடர்பாக ஆளுநர் எந்தவொரு முடிவையும் எடுக்காமல் காலம் தாழ்த்திவருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர். இதற்கிடையில், சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவுக் காரணமாக மருத்துவ சிகிச்சைப் பெறவேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதனையடுத்து, சிகிச்சைப் பெற அனுமதித்த உயர் நீதிமன்றம் அவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் பரோல் அளித்தது. பரோலில் வெளியே வந்த அவருக்கு சிறுநீரகத் தொற்று தீவிரமான காரணத்தால், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் தற்போது விழுப்புரம் காந்தி சிலை அருகிலுள்ள மரகதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பேரறிவாளனுக்கு துணையாக அவரது தாயார் அற்புதம்மாள் அங்கு உடனிருக்கிறார்.