விழுப்புரம்: திண்டிவனம் அருகே உள்ள ஓங்கூர் ஆற்றின் குறுக்கே விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 60 மீட்டர் நீளமுள்ள மேம்பாலம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. இந்த பழமையான மேம்பாலத்தை 'மைனர் பாலம்' என்று மக்கள் அழைப்பர்.
இப்பாலத்தில் மிகப்பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மேம்பாலத்தை வாகனங்கள் கடக்கும்போது அதிர்வுகள் ஏற்படுவதை வாகன ஓட்டிகளால் உணர முடிகிறது. குறிப்பாக வாகனங்கள் பாலத்தின் மீது செல்லும்போது பாலத்தின் குறிப்பிட்ட இணைப்புப் பகுதி மேலும் கீழுமாக அசைகிறது.
கன ரக வாகங்கள் கடந்துசெல்லும் இந்த பாலம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. வாகனங்கள் செல்லும்போது இவ்வாறு பாலம் உள்வாங்கி, மேலெழும் வீடியோ சமூக வலைதளங்களில் கடந்த இரு நாட்களாகப் பரவி வந்தது. அபாயத்தின் தன்மையை உணர்ந்த நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், ஓங்கூர் மேம்பாலத்தின் ஒரு பக்கத்தில் மட்டும் கடந்த 27ஆம் தேதி மாலை முதல் போக்குவரத்துக்குத்தடை விதித்தனர்.
ஒருவழிப்பாதை முறையில் அனைத்து வாகனங்களும் கடந்து செல்வதால், விழுப்புரம் - சென்னை இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பாலங்களின் தரத்தை உறுதிபடுத்தி ஆய்வு செய்யும் பணியை தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலர்கள் அடிக்கடி ஆய்வு செய்திருக்க வேண்டும்.
ஆனால், அவர்களின் கவனக்குறைவால் தான் பாலம் தற்பொழுது சேதமடைந்துள்ளதாகவும், தினசரி இப்பாலத்தை உபயோகிக்கும் கனரக வாகன ஓட்டிகள் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் பல முறை புகார் அளித்தும் துறைசார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேற்கண்ட இப்புகாரை 'நகாய்' அலுவலர்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை எனவும்; அலட்சியம் காட்டுவதாகவும் குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்கள் மூலமாகப்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இப்புகார் குறித்த தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலர்கள் பதில் தெரிவிக்கையில், “பாலத்தின் அடியில் ரப்பர் பேரிங் பேட் வைப்பது வழக்கம். இதை வைப்பதால் வாகன ஓட்டிகளுக்கு அதிர்வுகள் தெரியாது. இந்த பேரிங் பேட் பழுதடைந்ததால் அதிர்வுகளை உணர முடிகிறது.
இதனை சீரமைப்பது குறித்து 15 நாட்களுக்கு முன்பே தங்களுடைய குழு ஆய்வுசெய்தோம். நாங்கள் ஆய்வு மேற்கொண்டதை அறிந்தே, வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். பாலம் சேதமடையவில்லை; நன்றாகவே உள்ளது. பராமரிப்பில் தொய்வு ஏற்பட்டுள்ளது அவ்வளவே. பாலம் இடிந்து விழும் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்கின்றனர்.
இதற்கிடையே ஜூலை 29ஆம் தேதி காலை விழுப்புரம் ஆட்சியர் மோகன், தேசிய நெடுஞ்சாலை ஆணைய உதவிப் பொறியாளர் குமரேசன் உள்ளிட்டோர் இப்பாலத்தை ஆய்வு செய்தனர். இதுகுறித்து விளக்கம் அளித்த மாவட்ட ஆட்சியர் மோகன், “பொதுவாக பாலத்திற்கும் அதனை தாங்கி நிற்கும் தூணுக்கும் இடையில் இணைப்புக்காக ஸ்பிரிங் மற்றும் தகடுகள் பொருத்தப்படும். பத்தாண்டுகளுக்கு ஒருமுறை ஸ்பிரிங் தகடு மாற்றி சரிசெய்யப்படுவது வழக்கம்.
தற்போது எதிர்பாராதவிதமாக ஸ்பிரிங் மற்றும் தகடு விலகி உள்ளது. பழுதடைந்த மேம்பாலத்தைச்சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. 10 முதல் 15 நாட்களுக்குள் மேம்பாலம் சீரமைக்கப்பட்டுவிடும். அதன் உறுதித்தன்மையினை சரிபார்த்த பிறகு போக்குவரத்துக்கு மீண்டும் அனுமதிக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க: ஈரோடு அருகே செங்கல் சூளை தொழிலாளர்கள் வருவாய்த்துறைக்கு எதிராக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்