விழுப்புரம்:திண்டிவனம் நகராட்சி அருகே அமைந்துள்ள சாத்தனூர் பகுதியில் வசித்து வந்தவர், தேவா (32). இவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், நோயின் தீவிர தாக்கத்தால் நேற்று (நவ.14) மாலை மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
பின்னர், அவரது உடலானது சொந்த ஊரான சாத்தனூர் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு, உறவினர்களின் அஞ்சலிக்காக ஃப்ரீசர் பாக்ஸில் வைக்கப்பட்டுள்ளது. உறவினர்கள், நன்பர்கள் என அனைவரும் தேவாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அண்ணனின் மரணத்தை தாங்க முடியாத தம்பி பகவான், தேவாவின் உடல் வைக்கப்பட்ட ஃப்ரீசர் பாக்ஸில் சாய்ந்து அழுததாக கூறப்படுகிறது.
அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக ஃப்ரீசர் பாக்ஸில் இருந்து வெளியேறிய மின்சாரம் அவரை தாக்கியுள்ளது. இதனையடுத்து, அவரை காப்பாற்ற முயன்ற அருகில் இருந்த 8 பெண்கள் உள்பட 15 பேருக்கும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளனர். பின்னர், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அருகில் இருந்தவர்கள் மின்சாரத்தை உடனடியாக துண்டித்ததால், மின்சாரம் தாக்கப்பட்ட அனைவரும் சற்று நேரத்தில் கீழே சரிந்து விழுந்துள்ளனர்.