தரையில் படுக்க வைத்து சிகிச்சை விழுப்புரம்:கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் அதனையை சுற்றியுள்ள மாவட்டங்களில் சேர்ந்த ஏழை, எளிய மக்கள் தங்களுடைய மருத்துவ சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையை பெரிதும் நம்பி நீண்ட தூர பயணம் செய்து சிகிச்சை மேற்கொண்டு வந்தனர்.
இதனால், நோயாளிகள் உடனடியான மருத்துவ சிகிச்சை பெற வசதியாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 2010ம் ஆண்டு அனைத்து மக்களுக்கும் உயர் சிகிச்சை என்கிற சிறப்பான செயல் திட்டத்தின் மூலம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு கல்லூரி மருத்துவமனை கொண்டுவரப்பட்டது. தற்போது இங்கு நோயாளிகளின் நிலைமை மோசமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதனை மெய்ப்பிக்கும் போதிய படுக்கை வசதி இல்லாமல் தரையில் படுக்க வைத்து சிகிச்சை மேற்கொள்ளும் அவல நிலையும், மருத்துவர்களின் பொறுப்பற்ற பேச்சுக்களும் தொடர்பான வீடியோ வெளியானது. இந்நிலையில், அமைச்சர் செஞ்சி மஸ்தான், மருத்துவமனையில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் வருகிறார் என்ற காரணத்திற்காக அவசர கதியில் படுக்கைக்கான விரிப்புகள் மாற்றப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் இரண்டு அமைச்சர்கள் உள்ள மாவட்டமாக விழுப்புரம் மாவட்டம் திகழ்கிறது. ஆனால் இங்கு தான் அரசு மதுத்துவமனையின் நிலைமையும் இப்படி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு சிகிச்சைக்காக வரும் ஏழை எளிய மக்களின் இன்னல்களை களைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இதையும் படிங்க: பணம் இல்லாததால் சிகிச்சை மறுப்பு; பீகாரில் கர்ப்பிணி உயிரிழந்த சோகம்!