விழுப்புரம்:38ஆவது நாளாக நடைபெற்றுவரும் கள் இறக்கி விற்கும் உரிமை மீட்புப் போராட்டம் குறித்து தமிழ்நாடு கள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'விக்கிரவாண்டி வட்டம், நரசிங்கனூர் - பூரிகுடிசைப்பகுதியில் பல ஆண்டுகளாக அடக்குமுறைகளுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் ஆளாக்கப்பட்ட 60-க்கும் மேற்பட்ட பனையேறிகள் இயக்கமாக ஒருங்கிணைந்து தங்களின் உணவும் உரிமையுமான கள்ளை மீட்டெடுக்கும் விதமாக, 'தமிழ்நாடு கள் இயக்கம்' நடத்திவரும் கள் இறக்கி விற்கும் அறப்போராட்டத்தில், 'தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கத்தை' இணைத்துக்கொண்டு கடந்த 38 நாட்களாகத் தொடர்ந்து அறவழியில் போராடி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் கலப்படமற்ற இயற்கையான கள்ளை மட்டுமே இறக்கி, தங்கள் பயன்பாட்டுக்குப் போக வாழ்வாதாரத்திற்காக கள் விற்பனை செய்ய வேண்டும் எனவும்;
கள்ளை மீட்டெடுக்கும் இந்த ஒற்றை கோரிக்கையின் காரணமாக யாருக்கும் லஞ்சம், மாமூல் போன்றவைகளை தரமாட்டோம் எனவும், கோரிக்கை வெற்றிபெறும் வரை நேர்மையோடும் அறவழியிலும் போராடுவோம் எனவும் உறுதிபூண்டுள்ளனர்.
இந்நிலையில் காவல் துறையினர் தனது கோர முகத்தை பனையேறும் தொழிலாளர்களின் மீது காட்டத் தொடங்கியுள்ளனர். கஞ்சனூர் காவல்நிலையம், பெரியதச்சூர் காவல்நிலையம், செஞ்சி மதுவிலக்குப் பிரிவு மற்றும் விழுப்புரம் மதுவிலக்குப் பிரிவு ஆகியவற்றிலுள்ள காவல் துறை அலுவலர்கள் பனையேறும் தொழிலாளர்களை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, ஒரு நாள் முழுவதும் வைத்திருந்து வழக்குப் போட்டு அனுப்புகின்றனர்.
இதுவரை ஒரே ஊரைச் சேர்ந்த 34 தொழிலாளர்களைக் கைது செய்து, அலைக்கழித்திருக்கிறது, காவல்துறை. எங்கள் போராட்டத்தை நீர்த்துப்போக செய்து பழையபடி லஞ்சம், மாமூல் போன்றவைகளை கொடுக்க வைத்துவிட வேண்டுமென பல வகையிலும் முயற்சிக்கின்றனர்.
பிணத்தை வைத்து மிரட்டல்
பனையேறிகளைக் கைது செய்து அவர்களின் தொழிலை முடக்கினர். கைது செய்யப்படும் பனையேறிகளிடமிருந்து கைப்பற்றப்படும் உபகரணங்களை (கத்தி, இடைகயிறு, பெட்டி,...,)திரும்பக் கொடுப்பதுமில்லை. நீதிமன்றத்தில் ஒப்படைப்பதுமில்லை.