விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ளது பரங்கனி கிராமம். இங்கு 30க்கும் மேற்பட்ட இருளர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசித்துவருகின்றனர். இந்நிலையில், இந்த இருளர் குடியிருப்பைச் சேர்ந்த முனியாண்டி-தாட்சாயிணி என்பவரின் மூன்றாவது மகள் தனலக்ஷ்மி அண்மையில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 354 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் நான்காம் இடம் பிடித்துள்ளார்.
இதையடுத்து கணிதத் துறையில் மேற்படிப்பு படிக்க விருப்பப்பட்ட அவர், அதற்காக சாதிச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருந்தார். எஸ்டி பிரிவினருக்கு சாதிச் சான்றிதழ் வழங்குவதற்கு முன், சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை செய்ய அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அரசு அலுவலர்கள் வருவது வழக்கம்.
அதேபோல், தனலக்ஷ்மி வசிக்கும் பகுதிக்கு விசாரணைக்கு அலுவலர்கள் வந்துள்ளனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வேறு சமூகத்தினர், அவருக்குச் சாதிச் சான்றிதழ் வழங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல், எஸ்டி பிரிவில் சாதிச் சான்றிதழ் வழங்கக் கூடாது என்றும், எம்பிசி பிரிவில்தான் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று வாக்குவாதம் செய்துள்ளனர். இதனால் ஏற்பட்ட தகராறில், தனலக்ஷ்மியை அவர்கள் தாக்க முயற்சி செய்துள்ளனர்.
இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர்களில் மேற்படிப்பு வரை படிப்பவர்கள் அரிதினும் அரிது; அதையும் மீறி வருபவர்களை இதுபோன்று தடுப்பவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:கணவரின் சடலத்தை அடக்கம் செய்யமுடியாமல் தவித்த இருளர் பெண்!