விழுப்புரம் மாவட்டத்தைச் சேரந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஆன்லைன் கல்வி திட்டத்துக்கு எதிராக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரை தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம், தமிழ்நாடு பள்ளிகல்வித் துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என தெரிகிறது. இது குறித்து சமூக ஆர்வலர் சரவணன் நமது ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "பெற்றோர்களின் கருத்தைக் கேட்காமலே ஆன்லைன் வகுப்புகளுக்கான ஆணை மற்றும் வழிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இது எங்களின் உரிமையை பாதிக்கும் வகையில் உள்ளது.
இது தொடர்பான பொதுநல வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு இதுவரை வழங்கப்படவில்லை. ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களின் உடல்நலம், உரிமைகள் பாதிக்கப்படுகின்றன. மேலும், மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் மாணவர்களுக்கு ஏற்படுகிறது. ஆன்லைன் வகுப்புகளால் அனைத்து தரப்பினருக்கும் கல்வி சமமாக சென்றடைவதில்லை. ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள கணினி, ஆண்ட்ராய்டு செல்போன் உள்ளிட்ட இதர பொருள்கள் வாங்க வேண்டியுள்ளது. இது அனைத்து தரப்பு மக்களுக்கும் சாத்தியமில்லை.
பள்ளி செல்லும் மாணவர்கள் கணினி, செல்போன் போன்ற பொருள்களை உபயோகிப்பதால் அவர்களின் விழிதிறன் பெரிதும் பாதிக்கப்படுகிறது என மருத்துவர்களும், பெற்றோர்களும் தெரிவித்திருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாணவர்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியமோ அதே போன்று அவர்களது உடல் நலமும் முக்கியம். மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டுள்ள ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான வழிமுறை மாணவர்களின் நலன் சார்ந்தது அல்ல தனியார் பள்ளிகளின் கட்டண வசூலுக்கு அறிவிக்கப்பட்ட ஒன்று.
இதுபோன்ற வழிமுறைகளை வெளியிடும் முன்பு பெற்றோர்களின் கருத்துக்களை கேட்டிருக்க வேண்டும். இந்த பிரச்னையில் பெற்றோர்களின் கருத்தை கேட்ட பின்பு நீதிமன்றம் தீர்ப்பை வழங்க வேண்டும். இந்த ஆன்லைன் வகுப்புகளால் பெற்றோர்களுக்கும் மன அழுத்தம் அதிகமாகிறது.