விழுப்புரம் மாவட்டம் கானை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது கக்கனூர் எனும் கிராமம். கக்கனூர் கிராமத்தை சுற்றியுள்ள துரவிதாங்கள், அறியலூர்திருக்கை, புதூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்களிடையே மூன்று தலைமுறைகளாக அறியாமை இருளைப் போக்கிய பெரும்பங்கு புனித மலர் அரசு உதவிபெறும் பள்ளியையே சேரும்.
இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவரான பெஞ்சமின் சின்னப்பன் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் அரசு ஊழியராகப் பணியாற்றி வருகிறார். தன்னுடைய கிராமத்துக்கும் தான் படித்த பள்ளிக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், நண்பர்களுடன் இணைந்து அரசு உதவிபெறும் பள்ளிக்கு நவீன வசதிகளுடன் 8 வகுப்பறைகளைக் கட்டிக் கொடுத்ததுடன் உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தித் தந்துள்ளார்.
முன்னாள் மாணவர் பெஞ்சமின் சின்னப்பன் அனைத்து வகுப்பறைகளுக்கும் மரத்தால் செய்யப்பட்ட மேசை மற்றும் இருக்கைகள், கணினி ஆய்வகம், அறிவியல் ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறை, மூன்று நவீனக் கழிப்பறைகள், கிராமத்து ஏரி, குட்டைகளைத் தூர்வாரி மண் எடுத்து அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானம், புதிய மின் இணைப்புகள், ரூ.3 லட்சம் மதிப்பில் ஆழ்நிலைத் தொட்டி பதிக்கப்பட்டு குடிநீர் வசதிகள், இரண்டு அலுவலக அறைகள் ஆகியவற்றையும் ஏற்படுத்தி தந்துள்ளார்.
முன்னாள் மாணவரின் இந்த செயலுக்கு கிராமத்தை சேர்ந்த மக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து முன்னாள் மாணவர் பெஞ்சமின் கூறுகையில், கிராமத்து மாணவர்களும் நகரத்து மாணவர்களைப் போல அனைத்து வசதிகளுடன் கல்வி கற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த உதவியை செய்ததாக தெரிவித்தார்.