விழுப்புரம்:காணை ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர், சுரேஷ். இவர் தனது பாட்டி குப்பச்சி (89) என்பவருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கடந்த 21ஆம் தேதியன்று புகார் மனு ஒன்றை அளிக்க வந்துள்ளார்.
அந்த மனுவில், “என்னுடைய உடன் பிறந்த தம்பி மோகன். எனது பாட்டி குப்பச்சி உயிருடன் இருக்கும்போதே 2008ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதியன்று இறந்துவிட்டதாக போலியாக இறப்புச்சான்றிதழை தயார் செய்துள்ளார்.
அது மட்டுமில்லாமல் எனது தந்தையின் வாரிசு சான்றிதழில், என்னுடைய பெயரை நீக்கிவிட்டு தாயார் கோதாவரி, தங்கை சுகன்யா ஆகியோரின் பெயர்களை மட்டும் சேர்த்து, வாரிசு சான்றிதழை வருவாய்த்துறை அலுவலர்களிடம் வாங்கியுள்ளார். 2021ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதியன்று 2 ½ சென்ட் இடத்தை எனது தாய், தங்கையிடம் ஒரு பாகப்பிரிவினை (எ) விடுதலைப் பத்திரத்தை போலியாக எழுதி வாங்கிக்கொண்டுள்ளார்.
மேற்கண்ட பாகம் பிரிக்காத இடத்தை போலி வாரிசு சான்று மூலம் மோசடி செய்து பெற்றுள்ளார். இதற்கு வருவாய்த்துறை அலுவலர்களும் உறுதுணையாக இருந்துள்ளனர். எனவே, எனது தந்தையின் வாரிசு சான்றிதழில், எனது பெயரை நீக்கி போலி வாரிசு சான்று அளித்துள்ள இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு, அந்த பாகப்பிரிவினை விடுதலை ஆவணத்தை ரத்து செய்து, வாரிசு முறையில் எனக்குரிய பாகத்தை மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
உயிரோடு இருப்பவருக்கு இறப்புச் சான்றிதழ் பிறப்பும் இறப்பும் மனித வாழ்வின் மாற்றமுடியாத நிகழ்வே; அதற்காக அங்கீகாரம் வழங்கும் அரசே போலியான சான்றிதழை வழங்கிய சம்பவம் அரசு அலுவலர்களிடையே முகச்சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இந்த மனு குறித்து விசாரணை நடத்தி, தவறு செய்த அரசு அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:தாய், மகள் இரட்டை கொலை வழக்கு - ஒருவர் கைது