விழுப்புரம்: புதுச்சேரி - கடலூர் வரை மாநில பட்டியலினத்தவர்,பழங்குடியினர் பணிக்குழு செயலாளர் அற்புதராஜ் மற்றும் பணிக்குழு தலைவர் ஆரோக்கியதாஸ் ஆகிய இருவரும், ஆகஸ்ட 10 ஆம் தேதி 2000 பேர் ஒன்று கூடி தங்களுக்கான கோரிக்கையை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வலியுறுத்துவோம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில், “1950 ஆம் ஆண்டுஆகஸ்ட் 10 அன்று, இந்து அல்லாத மற்ற மதங்களைச்சார்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு (SC) இட ஒதுக்கீட்டு ஆணை செல்லாது என்று வெளியிடப்பட்ட அரசாணை வழியாக, இந்து அல்லாத பிற மதங்களைச் சார்ந்த தாழ்த்தப்பட்டோருக்கான சட்ட உரிமைகள், சலுகைகள் பறிக்கப்பட்ட கருப்பு நாள்.
இந்திய சாதிய சமூகத்தில், தாழ்த்தப்பட்டவர்கள் எந்த மதமாக இருந்தாலும் சமூகம், அரசியல், பொருளாதாரம், சமயம், பண்பாடு என எல்லா நிலைகளிலும் சாதிய கொடுமைகள், சாதிய பாகுபாடுகள் மற்றும் உரிமைகள் பறிக்கப்படுவதற்கும் தொடர்ந்து ஆளாகி வருகிறார்கள்.
மதச்சார்பற்ற நாட்டில் மத அடிப்படையில் இவ்வாறு வெளிவந்த ஆணையை எதிர்த்து, தொடர்ந்து 72 ஆண்டுகளாக மத்திய அரசிடம் குரல் எழுப்பி போராடி வருகிறோம். இதன் விளைவாக 1956 ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட சீக்கியர்களும், 1990 ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட பௌத்த சமயத்தவரும் மீண்டும் பட்டியலின பிரிவில் சேர்க்கப்பட்டனர்.
ஆனால் மதம் மாறிய தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும், பிற சிறுபான்மை சமூகத்தினரும் எஸ்சி உரிமையை பெற முடியாமல் மத்திய அரசால் மறுக்கப்பட்டு பிசி பட்டியலிலேயே உள்ளனர்.