விழுப்புரம்: குந்தலம்பட்டு பகுதியைச்சேர்ந்த முருகன் என்பவருக்கும், செவரப்பூண்டியைச் பகுதியைச் சேர்ந்த சந்தியா என்பவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் தாய் வீட்டில் மறுவிருந்துக்காக புதுமணத் தம்பதி இருவரும் சென்றுள்ளனர். நேற்று முன்தினம் காலை சந்தியா திடீரென மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது .
மருத்துவமனைக்கு உடனடியாக எடுத்துச்செல்லப்பட்ட நிலையில், சந்தியா உயிரிழந்துவிட்டதாகவும் பரிசோதனையில் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
இதனிடையே முருகன் குந்தலம்பட்டில் உள்ள தனது வீட்டுக்குச்சென்றுவிட்டு வருவதாகக்கூறி சந்தியாவின் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். ஆனால், அவர் வீட்டிற்குச்செல்லாமல் வயல்வெளியில் இருந்த பம்ப்செட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் போலீஸ் விசாரணையுடன் சேர்த்து கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது. விசாரணையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சோமஸ்பாடியைச்சேர்ந்த ஒருவருடன் சந்தியாவிற்கு திருமணம் ஆன நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக ஒரு மாதத்திலேயே அவர் தாய் வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.
பின்னர் செவரப்பூண்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஏழுமலை என்பவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் முருகனுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, கடந்த 9ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது.
சந்தியா விருப்பம் இல்லாமல் பெற்றோர்களின் வற்புறுத்தலால் தான் இந்த திருமணத்துக்கு சம்மதித்ததாகக் கூறப்படுகிறது. சந்தியா உயிரிழந்த தகவலை அறிந்து அவருடன் நட்பில் இருந்த ஓட்டுநர் ஏழுமலை என்பவர் லாரியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருமணமான ஆறே நாட்களில் புதுமணத்தம்பதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
இதையும் படிங்க: ஈரோடு ஐஆர்டிடி கல்லூரி மாணவி தூக்கிட்டுத்தற்கொலை - போலீஸ் தீவிர விசாரணை