எண்பது, தொன்னூறு காலக்கட்டத்தில் அதிகாலை, மாலை நேரங்களில் வீதியில் நடந்து சென்றால் கீச், கீச் என்ற சத்தம் கிராமங்கள் முழுவதும் ஆக்கிரமிக்கும். வளர்ந்து வந்த நாகரீகம், தொழில்நுட்பம் காரணமாக காலப்போக்கில் அந்த சத்தங்கள் குறைந்து, ஆங்காங்கே பாடல் ஒலிகளும், மனித சத்தமும் அதிகரிக்க தொடங்கின. அந்த கீச், கீச் சத்தம் முற்றிலும் காணாமல் போனது. இதற்கு காரணம் கதிர்வீச்சுகளின் தாக்கம் என்றாலும், அழகிய சத்ததை கொடுத்த தூக்கனாங்குருவி, சிட்டுக்குருவிகளை பாதுகாக்காமல், தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதிலியே ஆர்வமாய் இருந்தோம்.
இதனால் இன்று கிராமம் மற்றும் நகரங்களில் ஒரு குருவியின் சத்ததையாவது கேட்டுவிட மாட்டோமா என செல்போனில் டெக்டர் செயலியை ஆன் செய்து வைத்துக் கொண்டு காடு, மலை, முகடு, தரிசு நிலம் என அனைத்துப் பகுதியிலும் அலைந்து வருகிறோம். ஆனால் அதற்கு பலன் ஏதும் இல்லை. தற்போது தான் அறிவு வந்தது போலும், இருபது வருடம் கோமாவில் இருந்து தெளிந்தது போல,குருவிகளை காக்க அனைவரும் முயற்சிக்க வேண்டும் என வலுவான கோரிக்கைகள் எழுகின்றன.
அவை எங்களை காப்பாற்றுங்கள் என தங்களது இனிமையான சத்ததின் மூலம் பத்தாண்டுகளாக கத்தி வந்தன. ஆனால் அதையெல்லாம் நாம் காதில் வாங்கவில்லை. ஆனால் தற்போது அவை பாவம் செய்யாமல், புண்ணியம் மட்டுமே செய்ததால் சொர்க்கத்திற்கு சென்று விட்டன. இப்போது அவற்றை தேடினால் எப்படிக் கிடக்கும். இதற்கு மாற்றாக சில கிராம மக்கள் புண்ணியம் செய்ததற்கு பலனாக அந்த பகுதியில் மட்டும் சில குருவி வகைகளை காண முடிகிறது. அதில் சிலப்பகுதிகள் தான் விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகள்.