விழுப்புரம்:புதுச்சேரியை சேர்ந்தவரும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான ஆர்.வெங்கடரமணி (72)இந்திய ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். மனித உரிமைகள் மீது அக்கறை கொண்ட அவருக்கு என் வாழ்த்துகள் என விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் இணையத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தன் இணைய பக்கத்தில், “அரசியலமைப்புச் சட்டம் குறித்தும், மனித உரிமைகள் குறித்தும் ஈடுபாடும் ஆழ்ந்த புலமையும் கொண்டவர். அரசியலமைப்புச் சட்டத்தை சீராய்வு செய்வதற்கென நியமிக்கப்பட்ட நீதிபதி வெங்கடாசலையா கமிஷனில் துணைக்குழு ஒன்றில் உறுப்பினராக இருந்தவர்.
இந்திய சட்ட ஆணையத்தின் உறுப்பினராக இரண்டு முறை இருந்துள்ளார். நூல்கள் பல எழுதியவர். 1990 களில் புதுச்சேரியில் மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் சார்பில் லாக் அப் படுகொலை வழக்கு ஒன்றை நானும் நண்பர்களும் கையிலெடுத்துப் போராடியபோது புதுச்சேரி வந்திருந்த அவரை சந்தித்து உரையாடியதாக நினைவு .
அண்மையில் உச்சநீதிமன்றத்தில் ஹிஜாப் வழக்கில் ஆசிரியர் ஒருவருக்காக அவர் ஆஜரானார். "பிரிவினைச் சுவர்" இல்லாமல் ஆசிரியர்கள் மாணவர்களுடன் தொடர்பு கொள்ளும் சுதந்திரமான, தடையில்லா சூழலை விரும்புகிறோம்” என அவர் வாதாடியபோது, “ஹிஜாப் பிரிவினைச் சுவரை உருவாக்குகிறதா?" என நீதிபதிகள் கேள்வி கேட்டனர்
அதற்கு பதிலளித்த அவர், “ பள்ளிகள் அடிப்படையில் இந்த அனைத்துக் கூறுகளிலிருந்தும் விடுபட வேண்டும்,அங்கு ஏற்படும் ஒரு சிறிய கவனச்சிதறல்கள் கூட சுதந்திரமான அறிவுப் பரப்பலுக்குத் தடையாக மாறிவிடும்.மாற்றும்” என்ற ஒரு ஆணித்தரமான பதிலை முன் வைத்தார்