சமூக நீதியின்பால் பற்றுள்ள இந்த அரசிலும் அதே நிலை நீடிக்கக்கூடாது - ரவிக்குமார் எம்பி. - Mp ravikumar request to higher education minister
அரசுக் கல்லூரி பணி நியமனங்களில் கணிசமான பணியிடங்கள் மறுக்கப்பட்டுள்ளன. கடந்த அதிமுக ஆட்சியின்போது இட ஒதுக்கீடு என்பது ஆதிதிராவிடர்களுக்குப் பெருமளவில் மறுக்கப்பட்டிருக்கிறது. சமூக நீதியின்பால் பற்றுள்ள இந்த அரசிலும் அதே நிலை நீடிக்கக்கூடாது.
விழுப்புரம்: “உயர் கல்வித்துறை ஆசிரியர் பணியிடங்களிலும், ஆசிரியர் அல்லாத பணியிடங்களிலும் ஆதிதிராவிட மக்களுக்குக் கிடைக்க வேண்டிய பின்னடைவு காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையைக் (backlog vacancies) கண்டறிந்து அதை அரசு அறிவிப்பதோடு அவற்றை நிரப்ப சிறப்புப் பணி நியமன நடவடிக்கை எடுக்கவேண்டும்” என தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடியிடம் ரவிக்குமார் எம்.பி நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
“ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசு உயர்கல்வித் துறை தொடர்பான ஆய்வறிக்கையை (All India Survey on Higher Education-AISHE) வெளியிட்டுவருகிறது. 2019-20 ஆம் ஆண்டுக்கான AISHE ஆய்வறிக்கை 10.06.2021 அன்று வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் உயர் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகளுக்கான நியமனங்களில் ஆதிதிராவிட மக்கள் பெருமளவில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தரும் தகவல் அதில் தெரியவந்துள்ளது.
2011 -12 ஆம் ஆண்டுக்கான AISHE அறிக்கை அப்போது உயர்கல்வித் துறையில் ஆசிரியர் பணியிடங்கள் மொத்தம் 1,68,959 இருந்தன என்றுதெரிவிக்கிறது.இப்போது வெளியாகியிருக்கும் 2019 -20 AISHE அறிக்கையில் அந்த ஆசிரியர் பணியிடங்களின்
எண்ணிக்கை 2,02,085 ஆக உயர்ந்துள்ளது.
உயர்கல்வித்துறையில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் 33,126 ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. 2011-12 இல் ஆதிதிராவிடர் 14,098 பேர் ஆசிரியர்களாக இருந்துள்ளனர்.2019-20 அறிக்கையின்படி அந்த எண்ணிக்கை 22,508 ஆக உள்ளது. 2011-12 க்கும் 2019-20 க்கும் இடையில் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 8410 பேர் புதிதாக ஆசிரியர்களாகப் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது அதன்மூலம் தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்தமாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் 2,02,085 இல் 18% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டிருந்தால் 36,375 ஆதி திராவிடர்கள் பணியமர்த்தம் பெற்றிருக்கவேண்டும். ஆனால் 22,058 பேர்தான் ஆசிரியர்களாக உள்ளனர். மொத்தத்தில் 14,317 ஆசிரியர் பணியிடங்கள் ஆதிதிராவிடருக்கு மறுக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர் அல்லாத பணி நியமனங்களிலும் பல ஆயிரம் வேலைகள் மறுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 2011-12 இல் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் மொத்தம் 1,10,988 இருந்துள்ளன. அதில் ஆதிதிராவிடர் சமூகத்தினர் 16289 பேர் இருந்துள்ளனர். ஆசிரியர் அல்லாத பணியிடங்களின் எண்ணிக்கை 2019-20 இல் 1,63,316 ஆக உயர்ந்துள்ளது. அதில் ஆதிதிராவிடர்களின் எண்ணிக்கையும் 24,753 ஆக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் 1,63,316 இல் 18% எனக் கணக்கிட்டால் 29,396 ஆதி திராவிடர்கள் பணியமர்த்தம் பெற்றிருக்கவேண்டும். ஆனால் 24,753 பேர்தான் உள்ளனர். மொத்தத்தில் 4643 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் ஆதிதிராவிடருக்கு மறுக்கப்பட்டுள்ளன.
உயர்கல்வித் துறையின்கீழ் அரசுக் கல்லூரிகள் மட்டுமின்றி தனியார் கல்லூரிகளும், சுயநிதிக் கல்லூரிகளும் இருக்கின்றன. அவற்றில் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படுவதில்லை என்பதால் இந்த ஒட்டுமொத்தப் பணியிடங்களும் அரசு வேலைவாய்ப்பில் மறுக்கப்பட்டதாகக் கூற முடியாது. எனினும் அரசுக் கல்லூரி பணி நியமனங்களில் கணிசமான பணியிடங்கள் மறுக்கப்பட்டுள்ளன. கடந்த அதிமுக ஆட்சியின்போது இட ஒதுக்கீடு என்பது ஆதிதிராவிடர்களுக்குப் பெருமளவில் மறுக்கப்பட்டிருக்கிறது. சமூக நீதியின்பால் பற்றுள்ள இந்த அரசிலும் அதே நிலை நீடிக்கக்கூடாது. எனவே தங்களது மேலான பரிசீலனைக்குப் பின்வரும் கோரிக்கைகளை முன் வைக்கிறேன்:
1. AISHE 2018-19 அறிக்கையின்படி தமிழ்நாட்டில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழக ஆசிரியர் பணிகளில் ஆதிதிராவிடர் 15 விழுக்காடும், அரசு கல்லூரி ஆசிரியர் பணிகளில் 14.28 விழுக்காடும் இருப்பதாகவும்; தனியார் பல்கலைக்கழகங்களில் 5.9 விழுக்காடும் கல்லூரி ஆசிரியர் பணியிடங்களில் 9.5 விழுக்காடும் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. 2020-21இல் என்ன நிலை என்பது தெரியவில்லை. எனவே, உயர் கல்வித்துறை ஆசிரியர் பணியிடங்களில் ஆதிதிராவிட மக்களுக்குக் கிடைக்க வேண்டிய பின்னடைவு காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையைக் (backlog vacancies) கண்டறிந்து அதை அரசு அறிவிக்க வேண்டும்.
2. உயர்கல்வித் துறையில் உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் ஆதிதிராவிட மக்களுக்குச் சேர வேண்டிய பின்னடைவு காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையைக் கண்டறிந்து அறிவிக்க வேண்டும்.
3. ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களில் ஆதிதிராவிடர்களுக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான சிறப்புப் பணி நியமன நடவடிக்கை (Special Drive) மேற்கொள்ளப்பட வேண்டும்.
4. ஒப்பந்தப் பணிகளில் இருக்கும் ஆசிரியர்களை பணி வரன்முறை செய்யும் போது ஆதிதிராவிடர்களின் இட ஒதுக்கீடு எவ்விதத்திலும் பாதிக்கப் படாமல் பாதுகாக்க வேண்டும்.
5.தனியார் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளும் பல்வேறு அரசு சலுகைகளைப் பெறுகின்றன என்பதால் அவற்றில் பணி நியமனங்களிலும் மாணவர் சேர்க்கையிலும் இட ஒதுக்கீட்டுக் கொள்கையைக் கடைபிடிக்குமாறு அரசு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.