விழுப்புரம்:விழுப்புரத்தில் அதிமுக தொண்டர்கள் கருத்துக்கேட்பு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பேசிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, “அதிமுகவின் அடிப்படை தொண்டர்கள் நினைப்பதை கருத்துக்கேட்டு எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது. தற்பொழுது அடிப்படை தொண்டர்களின் கருத்துகள் வெளிவருவதில்லை. அடிப்படை அண்ணா திமுக உறுப்பினர்களின் கருத்துகளைக்கேட்ட பின் தான் தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இதைத்தான் அப்பொழுது எம்ஜிஆர் காலத்திலும் ஜெயலலிதா காலத்திலும் கடைப்பிடித்தனர்.
ஆனால், ஜெயலலிதா மறைவிற்குப் பின்பு அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. ஓபிஎஸ் ஈபிஎஸ்சை வீழ்த்தினாரா அல்லது ஈபிஎஸ் ஓபிஎஸ்ஸை வீழ்த்தினாரா என்கின்ற அளவில்தான் அண்ணா திமுகவின் யுத்தம் திசை மாறி சென்று கொண்டுள்ளது. அரசியல் கட்சியின் நோக்கம் ஆளுகின்ற கட்சியாக அந்த கட்சி உருவெடுக்க வேண்டும். ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் கடந்த ஆறு ஆண்டுகளாக அண்ணா திமுகவின் தலைமைப்பதவிக்காக இவர்களுக்குள் தொடர்ந்து யுத்தம் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து அண்ணா திமுக பலவீனம் அடைகின்ற வகையில் தொடர்ந்து இவர்களின் செயல்பாடு உள்ளது.
மற்ற கட்சிகளுக்கு இது பலத்தை ஏற்படுத்தும் முக்கியமாக திமுக வலுப்பெறும். தொண்டர்கள் மூலம் ஒற்றைத் தலைமையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நான்கு, ஐந்து முக்கிய அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து தலைவரைத் தேர்ந்தெடுக்கின்றனர்.