விழுப்புரம்:மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக பேசும் பிரதமர் நரேந்திர மோடி, நேற்று (டிச.27) விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்து ஆங்கில ஆசிரியர் திலீப் குறித்து பாராட்டிப் பேசியிருந்தார். தகவல் தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்தி மாணவர்களுக்கு ஆங்கிலத்தின் மீது ஆர்வம் வரும் வகையில், கற்பித்தலில் புதுமை புகுத்திய இவரின் முயற்சிக்காக பிரதமர் இவரை பாராட்டி இருந்தார்.
ஆங்கில ஆசிரியரான எஸ்.திலீப் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவில் உள்ள சத்யமங்கலம் கிராமத்தில் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வருகிறார். இவர் 2020ஆம் ஆண்டின் சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருதைப் பெற்றவர். குழந்தைகள் ஆங்கிலத்தை எளிதில் கற்கும் வகையில் விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில் பாடங்களை உருவாக்கியுள்ளார். இதன்மூலம் ஆங்கில உச்சரிப்பு, ஆங்கில இலக்கணம் ஆகியவற்றை மாணவர்கள் விளையாட்டு மூலம் எளிதில் கற்கலாம். கிராமப்புற மாணவர்களுக்காக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரமாக உழைத்து வருகிறார்.
பிரதமர் பாராட்டால் மகிழ்ச்சியின் தருணத்தில் இருக்கும் அவரிடம் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் சார்பில் பேட்டி எடுப்பதற்காக பேசினோம். புன்சிரிப்புடன் நம்மிடம் பேச்சை தொடங்கினார். "நான் ஆசிரியர் பணிக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிறது. பிரதமர் என்னை பாராட்டியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பள்ளியின் கட்டமைப்புக்காக நாம் அரசையே நம்பி இருக்க வேண்டியதில்லை. நம்மால் முடிந்த விஷயத்தை நாம் கொண்டு வரலாம். மாணவர்களுக்காக ஐந்து லேப்டாப் என்னுடைய முயற்சியால் கொண்டு வந்தேன். அதன் பிறகு ஸ்மார்ட் வகுப்பறை அமைப்பதற்கு என்னால் முடிந்த முயற்சிகளை எடுத்தேன். அதற்கு பலரும் எனக்கு உறுதுணையாக இருந்தனர்.
மாணவர்களுக்கு எளிமையாக ஆங்கிலம் புரியவேண்டும் என்பதற்காக படங்களுடன் கூடிய அகராதியை சில ஸ்ஃபான்சர்கள் உதவியுடன் மாணவர்களுக்கு கொடுத்திருக்கிறேன் என்றவரிடம், பாடம் நடத்துவதில் தகவல் தொழில்நுட்பத்தை எப்படி புதுமையாக கையாண்டீர்கள் என கேட்டோம்.