தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்'- க.பொன்முடி!

விழுப்புரம்: சிறுமி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்களை அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என திமுக சட்டப்பேரவை உறுப்பினர் க.பொன்முடி வலியுறுத்தியுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவை உறுப்பினர் க.பொன்முடி
செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவை உறுப்பினர் க.பொன்முடி

By

Published : May 12, 2020, 10:09 AM IST

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் ஜெயஶ்ரீ (15). வீட்டில் தனியாக இருந்த ஜெயஶ்ரீயை அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்களான முருகன், கலியபெருமாள் ஆகியோர் உயிரோடு எரித்து கொலை செய்தனர்.

இதையடுத்து மறைந்த ஜெயஶ்ரீ உடலுக்கு திமுக சட்டப்பேரவை உறுப்பினர் க.பொன்முடி நேற்று மாலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் திமுக சார்பில் 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையும் வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இத்தகவலை கேள்விப்பட்டு என்னை அழைத்து, நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி கட்சியின் சார்பாக நிதி அளிக்கும்படி கூறினார்.

அதிமுகவினரால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஜெயஸ்ரீயின் உடலுக்கு கட்சித் தலைவரின் ஆணையை ஏற்று அஞ்சலி செலுத்தி, அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, கட்சியின் சார்பில் 50,000 ரூபாயை முதல்கட்ட நிதியாக அளித்துள்ளேன்.

இதுபோன்ற கொடூரச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளவர்களை அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, எந்த கட்சியாக இருந்தாலும் அவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும்.

அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும். இரண்டு வருடங்களுக்கு முன்பே இரு தரப்பினரிடையே முன்விரோதம் இருந்தது. இதை கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த குற்றச்சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை.

தற்போது இது ஒரு 15 வயது சிறுமி ஜெயஸ்ரீயின் உயிரைப் பறிக்கும் சம்பவமாக அமைந்துவிட்டது என்பது மிகவும் வருத்தத்துக்குரியது. இந்த சிறுமதுரை கிராமமே அந்த அதிமுக ரவுடிக் கும்பலைக்கண்டு அஞ்சும் வகையில் உள்ளது.

இதனை இந்த அரசும், காவல் துறையும், சட்டத்துறையும் கட்டுப்படுத்தும் வகையில் மிக அதிகபட்ச தண்டனையை அவர்களுக்கு வழங்க வேண்டும்.

செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவை உறுப்பினர் க.பொன்முடி
பள்ளியிலேயே முதல் வகுப்பில் தேர்ச்சிபெறும் மாணவியாக ஜெயஸ்ரீ விளங்கினார் என்பதை கேள்விப்படும்போது உண்மையாகவே நெஞ்சம் பதைபதைக்கிறது.

அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

இதையும் படிங்க: அதிமுக பிரமுகர் வெறிச்செயல்: எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் கலங்கவைக்கும் வாக்குமூலம்!

ABOUT THE AUTHOR

...view details