விழுப்புரம்: செஞ்சியில் திமுக வேட்பாளர்கள் செஞ்சி மஸ்தான், மயிலம் மாசிலாமணி, திண்டிவனம் சீதாபதி சொக்கலிங்கம் ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் நேற்று மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
"குறைந்திருந்த கரோனா தொற்று தற்போது அதிகரித்துள்ளது. கூட்டத்திற்கு வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும். இங்குள்ள வேட்பாளர்களும் முகக்கவசம் அணியவில்லை. இப்போது சொல்லும்போது தான் அணிகிறார்கள். நான் ஏன் அணியவில்லை என்று கேட்கிறீர்களா ? நான் உயரத்தில், தூரத்தில் உள்ளேன். தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பாதிப்பில்லை. லேசான உடல் உபாதைகள் ஏற்பட்டு சரியாகிவிடும்.
தயவு செய்து முகக்கவசம் அணியுங்கள்; தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் முக்கியம். கரோனா காலத்தில் 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் மூலம் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்தோம். அப்போது சென்னை சேப்பாக்கம் எம்எல்ஏ ஜெ. அன்பழகன் கரோனா ஏற்பட்டு உயிரிழந்தார்.
அரசுப் பணத்தை தேர்தலுக்காக செலவிடும் ஆட்சி தற்போது நடந்துவருகிறது. விலைவாசியை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரையை தவிர தேவையற்ற பொருள்களை மக்களிடம் திணிக்கிறார்கள்.