விழுப்புரம்:அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் 15வது ஊதிய ஒப்பந்தத்தைச் செயல்படுத்துதல், வரவுக்கும் செலவுக்கும் வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்குதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், வாரிசுக்கு வேலை, ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
சென்னையில் நேற்று முன்தினம் தமிழ்நாடு அரசுக்கும், போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விமுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில், அரசுப் பேருந்துகள் இயக்கம் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர், “போக்குவரத்து தொழிலாளர்கள் ஒரு பிரிவினர் வேலை நிறுத்தம் அறிவித்திருந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் ஆணைப்படி, பேருந்துகள் சீராக இயங்கி வருகின்றன. தொழிலாளர்கள் முன்வைத்த ஆறு கோரிக்கைகளில், நான்கு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு விட்டன.