விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள கலத்தப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முருகன்-பிரமிளா தம்பதி. இவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் அண்மையில் பெங்களூருக்கு கூலி வேலைக்கு சென்றிருந்த முருகன், கரோனா ஊரடங்கால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் உள்ளார். இதையடுத்து சொந்த வீடு இல்லாத காரணத்தினால், கலத்தப்பட்டு பகுதியில் இருக்கும் கரும காரிய கொட்டகையில் தனது ஆறு குழந்தைகளுடன் தங்கியிருந்த பிரமிளா, உணவுக்கு வழியின்றி தவித்து வந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக நிர்வாகிகள் மூலம் பிரமிளாவின் குடும்பத்துக்கு தேவையான அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்தார். மேலும் அமைச்சரின் உத்தரவின் பேரில் அரசு அலுவலர்கள் பிரமிளாவை கொட்டகையிலிருந்து உடனடியாக காலி செய்து, அப்பகுதியில் இருந்த வாடகை வீட்டில் குடி அமர்த்தினர்.