விழுப்புரம்: தமிழ்நாடு முழுவதும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இரண்டாம் கட்டமாக மறுபரிசீலனை செய்யப்பட்ட பயனாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் விழா நேற்று (நவ.10) நடைபெற்றது. இவ்விழாவினை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் சட்டக் கல்லூரியில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் விழாவிற்கு, மாவட்ட ஆட்சியர் சி.பழனி தலைமை தாங்கினார். விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்துகொண்டு 22 ஆயிரம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகைக்கான பற்று அட்டை வழங்கும் பணியைத் தொடங்கி வைத்து, 10 மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகைக்கான ஆணையினை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “ தமிழக முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பெண்களின் வளர்ச்சி தான், நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பதை உணர்ந்து, பெண்கள் சுயமாகவும், சுதந்திரமாகச் செயல்படும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.
அந்த வகையில், குடும்பத்திற்கு ஆதாரமாகவும், துணையாகவும், பாதுகாப்பாகவும் விளங்கும் குடும்பத் தலைவிகளையும், உழைக்கும் மகளிரின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களைப் பெருமைப்படுத்தும் பொருட்டு, கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தினை கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி துவக்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் 4 லட்சத்து 97 ஆயிரத்து 708 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டது. அதில் முதற்கட்டமாக, தகுதி வாய்ந்த 3 லட்சத்து 25 ஆயிரத்து 514 மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, விடுபட்ட குடும்பத் தலைவிகள், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மேல்முறையீடு செய்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டது.