விழுப்புரம்: கண்டாச்சிபுரம் அருகேயுள்ள வீரபாண்டி கிராமத்தில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டார்.
கிராம சபைக்கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு இடங்களில் குடிநீர் பிரச்னை உள்ளது எனக் குற்றம்சாட்டினர். மேலும், 100 நாள்கள் வேலையில் முறைகேடு நடப்பதாகவும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இதுகுறித்து அலுவலர்கள் முறையான விளக்கம் அளிக்காததால், பொதுமக்கள் அமைச்சரை முற்றுகையிடத் தொடங்கினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத்தொடர்ந்து அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ரேவதி, தான் அதிமுகவைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் என்பதால் நிதி ஒதுக்கீடு செய்யாமல் கட்சிப் பாகுபாடு பார்த்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செயல்படுவதாக அமைச்சரிடம் வாக்குவாதம் செய்தார்.
'ஓ அப்படியா... நீ உட்காரு' - கிராம சபைக்கூட்டத்தில் அமைச்சர் பொன்முடியின் பேச்சால் சலசலப்பு இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டதையடுத்து, போலீசார் மற்றும் திமுக நிர்வாகிகள் ஒன்றிய கவுன்சிலர் ரேவதியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும், கிராம மக்கள் அடுக்கடுக்காக கேள்விகளை அலுவலர்களிடம் முன்வைத்தனர். இதனால், அமைச்சர் பொன்முடி, பாதியில் எழுந்து சென்றார்.
ஆதிச்சனூர் பகுதியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்திற்கு செல்வதாகக்கூறி கிளம்பிச்சென்றதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையும் படிங்க: காந்தி கோயிலில் அபிஷேக ஆராதனை - குமரி அனந்தன் பங்கேற்பு