விழுப்புரம்: விழுப்புரத்தில் உள்ள தெற்கு மாவட்ட திமுக சார்பில், இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. அதில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “தமிழக முதல்வர் ஸ்டாலினுக்குப் பிறகு இளைஞர் அணியை முன்னெடுத்திருக்கும் உதயநிதி ஸ்டாலின், வருகிற டிசம்பர் 17ஆம் தேதி சேலத்தில் நடத்தவிருக்கும் மாநாட்டிற்கு விழுப்புரம் தெற்கு மாவட்டத்தின் சார்பில் பெருந்திரளாக இளைஞர்கள் பங்கேற்க வேண்டும்.
அன்றைய காலகட்டத்தில், நம்முடைய தளபதி இளைஞர்களை வழிநடத்திச் சென்றபோது மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் விழுப்புரம் மாவட்டத்தில், இளைஞர்கள் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டனர். நம்முடைய தளபதி கரத்தை வலுப்படுத்தினர், நம்முடைய தமிழக முதலமைச்சரைப் போன்று தற்போது அமைச்சராக உள்ள தம்பி உதயநிதி, தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிகவும் வேகமாக செயல்பட்டு வருகிறார்.
நாம் அவருடன் கைகோர்த்து, மாணவர்களின் மருத்துவர் கனவைப் பறிக்கும் நீட் தேர்வு முறையை ரத்து செய்ய ஒன்றுபட்டு பாடுபட வேண்டும். அதேபோன்று, நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் 50 லட்சத்திற்கும் அதிகமாக கையெழுத்து பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள கையெழுத்து இயக்கம், தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 5 லட்சம் கையெழுத்துக்கள் பெற வேண்டும்.