திமுக நிர்வாகி மீது உறுப்பினர் படிவத்தை தூக்கி வீசிய அமைச்சர் பொன்முடி விழுப்புரம்:திருக்கோவிலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் இன்று ( ஏப்.08 ) தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி தலைமையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வின்போது திமுக தலைமை கழகத்தின் மூலமாக புதிய நிர்வாகிகளை பூத் கமிட்டி நிர்வாகிகளாக தேர்வு செய்ய வேண்டும் என கூறி இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், அந்தந்த பகுதி திமுக நிர்வாகிகள் ஏற்கனவே பொறுப்பில் இருந்தவர்களை பூத் கமிட்டி நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டு, படிவங்களை பூர்த்தி செய்து அமைச்சர் பொன்முடியிடம் வழங்கி உள்ளனர்.
இதனைக் கண்டு ஆத்திரமடைந்த அமைச்சர் பொன்முடி அந்த படிவத்தை தூக்கி எரிந்து ஆவேசமாக பேசினார். இதனால் நிர்வாகிகள் இடையேயும் பொதுமக்கள் இடையேயும் பரபரப்பு நிலவியது. மேலும், புதிதாக மீண்டும் படிவங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என கூறிவிட்டு திருக்கோவிலூர் மற்றும் அரகண்டநல்லூர் பகுதியில் நீர் மோர் பந்தலை திறந்துவைத்து விட்டு அமைச்சர் பொன்முடி அங்கிருந்து சென்றார். இதனால் நிர்வாகிகளிடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி, விழுப்புரத்தில் நடந்த அரசு நியாயவிலை கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் பொன்முடி, மேடையில் நின்றிருந்த ஒன்றிய சேர்மனிடம் “ஏம்மா நீ எஸ்சி தானே?” என கேட்ட சம்பவம் பெரும் விவாதத்திற்கு உள்ளானது.
அதேபோல், சென்னை அம்பத்தூரில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் பொன்முடி, இலவச பேருந்து குறித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது, “பெண்கள் நீங்கள் எங்கே போனாலும் ஓசி தான்.. ஓசி பஸ்சில் தான் போறீங்க” என கூறினார். மேலும், “ஆமா எனக்கு ஓட்டு போட்டு கிழிச்சுட்டீங்க” என கூறினார். இந்த விவகாரமும் பெரும் விவாதத்திற்குள்ளானது.
இதனைத் தொடர்ந்து அதே விழுப்புரம் மாவட்டத்தில் அக்டோபர் 2ஆம் தேதி வீரபாண்டி கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டார். அப்போது, அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ரேவதி, தான் அதிமுகவைச் சேர்ந்தவர் என்பதால் எனக்கு நிதி ஒதுக்கீடு செய்து கொடுக்காமல் பாகுபாடு பார்ப்பதாக குற்றம் சாட்டினார். இதனைக் கேட்ட அமைச்சர் பொன்முடி, “ஓ.. அப்படியா.. நீ உட்காரு...” என ஒருமையில் பேசியிருந்தார். இந்த, சம்பவமும் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் கள்ளக்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் பொன்முடி, திமுக ஆட்சியில் ஒரு குறையுல் இல்லை என திராவிட மாடல் குறித்து பெருமிதமாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது, கீழே இருந்த பெண் ஒருவர், “இங்கே எல்லாமே குறையாக தான் இருக்கு” என குற்றம் சாட்டினார். இதனைக் கேட்ட பொன்முடி,“ நீ வாயை மூடு கொஞ்சம்” என மீண்டும் ஒரு பெண்ணை ஒருமையில் பேசியிருந்தார். இச்சம்பவமும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து அமைச்சர் பொன்முடி இதுபோல் பென்களை இழிவாக பேசி சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கியாகக் கொண்டுள்ளார். அந்த வரிசையில் இன்றும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அமைச்சர் பொன்முடியின் தொடர் சர்ச்சையால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.
இதையும் படிங்க:மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் நீட் பயிற்சி மையங்கள்: மருத்துவர் ராமதாஸ் காட்டம்!