விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூபாய் 45 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நினைவுப்பூங்கா மற்றும் நியாய விலைக் கடையை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறுகையில், ‘தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை சார்பாக கோயில்களில் சிறப்பாக நிர்வாகம் நடைபெற வேண்டும் என்று அந்த காலத்தில் இருந்து கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, அறநிலைத்துறையின் கீழ் சிறப்பாக நிர்வாகம் நடைபெற்று கொண்டிருக்கிறது. பிரதமர் வரலாறு தெரிந்து பேச வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள எந்த கோயிலாக இருந்தாலும் அதில் சிறப்பாக நிர்வாகம் நடைபெறுகிறது என்றால், அதற்கு காரணம் தமிழ்நாடு அறநிலையத்துறைதான். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் மற்றும் மகளிரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது, திராவிட மாடல் அரசு.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நினைக்கக்கூடிய, அயராது உழைத்துகொண்டிருக்கக் கூடிய ஒரே அமைச்சர் சேகர்பாபுதான். எந்த துறையாக இருந்தாலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என நினைக்கக்கூடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்.