அமைச்சர் பொன்முடி செய்தியாளர் சந்திப்பு விழுப்புரம்:அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தகுதி குறைந்த உதவி பேராசிரியர்கள் 56 பேரை பதவி நீக்கியது சரியே என்றும், அவர்கள் விருப்பப்பட்டால் அவர்கள் தகுதிக்கேற்ற பணிக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தகுதி குறைந்த உதவி பேராசிரியர்கள் 56 பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டது சரியே. 2011ஆம் ஆண்டுக்கு முன்பே, அண்ணாமலை பல்கலைக்கழகம் தன்னாட்சியாக இருக்கும் பொழுது நியமிக்கப்பட்டவர்கள் இவர்கள்.
உதவி பேராசிரியர்களாக நியமிப்பதற்கான குறைந்தபட்ச தகுதிகள் கூட இல்லாதவர்களை நியமித்தது, அண்ணாமலை பல்கலைக்கழகம். எந்த தகுதியும் இல்லாதவர்களை நியமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களை எல்லாம் உதவி பேராசிரியர்களாக நியமனம் செய்துள்ளது.
இது தொடர்பாக நீதிமன்றமும், அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது. அதனைத் தொடர்ந்து, இது பல்கலைக்கழக சிண்டிகேட், துணை வேந்தர் மற்றும் உயர் கல்வித்துறை ஆகியவை சேர்ந்து எடுத்த நடவடிக்கை ஆகும்.
இதையும் படிங்க:'மதுரை வீரன் உண்மை வரலாறு' புத்தகத்துக்கு தடை விவகாரம்: குழந்தை ராயப்பன் விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு
பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் விருப்பப்பட்டால், அவர்களுடைய தகுதிக்கு ஏற்ப தகுந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதனை அரசு பரிசீலிக்கும். அண்ணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு ரூ.150 தேர்வு கட்டணத்தில் இருந்து ரூ.225 உயர்த்திருப்பது பற்றி அறிந்தோம். தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள 50 சதவீத கட்டண உயர்வு இந்த செமஸ்டர் தேர்வுகளுக்குப் பொருந்தாது.
உயர்த்தப்பட்ட தேர்வுக் கட்டணத்தை செலுத்தத் தேவையில்லை. கடந்த ஆண்டு செலுத்தப்பட்ட தேர்வுக் கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே போதும். அனைத்து துணை வேந்தர்களிடமும் கலந்து ஆலோசித்து, அடுத்த ஆண்டு முதல் அனைத்து கல்லூரிகளிலும் ஒரே கட்டண முறையை அமல்படுத்த ஏற்பாடு செய்யப்படும். அதே போன்று, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் வெளிவந்த வினா தாள்களில் ஏற்பட்டு உள்ள குளறுபடி சரி செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:திருவண்ணாமலை விவசாயிகள் 6 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து.. ஒருவர் மீது தொடரும் வழக்கு.. முதலமைச்சரின் விளக்கம் என்ன?