விழுப்புரம் அருகேயுள்ள பானாம்பட்டு கிராமத்தில் 263 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பாதாள சாக்கடை திட்டத்துக்கு இன்று (நவ.11) சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அடிக்கல் நாட்டினார். அப்போது மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் முத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம் "ஜெயலலிதா மரணம் குறித்து ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடிக்கத் தேவையில்லை. ஜெயலலிதா மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தாமதமாகிறது.
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்துப் பேச திமுகவுக்கு தகுதி இல்லை. பேரறிவாளனுக்காக ஸ்டாலின் இன்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார். பேரறிவாளன் உள்ளிட்ட அனைவருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றியவர்கள் திமுகவினர்.