விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கடந்த ஜனவரி மாதம் 8ஆம் தேதி, கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இதனால், திருக்கோவிலூர் கள்ளக்குறிச்சியில் இணைந்தது. இதை விரும்பாத அப்பகுதியினர், திருக்கோவிலூரை விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வலியுறுத்தி, அனைத்துக் கட்சி சார்பில் இன்று ஒருநாள் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
வியாபாரிகள் மட்டுமல்லாமல் ஆட்டோ ஓட்டுநர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், திருக்கோவிலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பொன்முடி, விழுப்புரம் மக்களவை உறுப்பினர் துரை ரவிக்குமார் ஆகியோர் கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்தனர்.