கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மார்ச் 22 முதல் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில் மேலும் இந்த உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரையில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட 23 நபர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 1,922 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விழுப்புரம் கரோனா தொற்று சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 26 பேருக்கு கரோனா பாதிப்பில்லை என்று கூறி சுகாதாரத் துறை அலுவலர்கள் கடந்த 7ஆம் தேதி அவர்களை விடுவித்தனர். ஆனால், மறுநாள் வெளியான ரத்த பரிசோதனையின் முடிவில் விடுவிக்கப்பட்ட 26 பேரில் நான்கு பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, விடுவிக்கப்பட்ட நால்வரில் விழுப்புரம் பகுதியை சேர்ந்த மூன்று நபர்களை அலுவலர்கள் மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர்களுள் ஒருவரான டெல்லியைச் சேர்ந்த நிதின் இளைஞர் மட்டும் தலைமறைவானார். இதையடுத்து ஏழு தனிப்படைகள் அமைத்து விழுப்புரம் காவல்துறையினர் அவரை தேடி வந்தனர்.