அரசு பேருந்தை வழிமறித்து மது பிரியர் அட்டகாசம் விழுப்புரம்:விழுப்புரம் அருகே உள்ள முத்தாம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து விழுப்புரம் நகர் பகுதிக்கு வரக் கூடிய பிரிவு சாலையில் பேருந்து நிறுத்தம் மற்றும் வணிகக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த பேருந்து நிறுத்தத்திற்கு தினந்தோறும் சென்னை, திண்டிவனம், விழுப்புரம் மற்றும் விக்கிரவாண்டி, நகரப் பகுதிக்குச் செல்ல ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், வெகு நாட்களாக இப்பகுதியில் இரவு நேரங்களில் பேருந்து நிறுத்தம் அருகிலேயே மதுப்பிரியர்கள் மது அருந்தி விட்டு, அங்கு வருபவர்களிடம் தகராறில் ஈடுபடுவதும், வாகனங்களை மறிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று (நவ.6) இரவு மதுப்பிரியர் ஒருவர் தடை செய்யப்பட்ட சாராய பாக்கெட்டைப் பிரித்து சாலையிலேயே மது அருந்தி அட்டகாசம் செய்துள்ளார். மேலும், அவ்வழியாக சென்ற அரசுப் பேருந்தை நிறுத்தியும், வாகனங்களை வழி மறித்தும் பயணம் செய்பவர்களை முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கடந்த மே 13ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், எக்கியார் குப்பம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து 40 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் எக்கியூர்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த கள்ளச்சாரயம் அருந்தி விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் 19 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தூத்துக்குடியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கொட்டை பாக்கு கடத்தல் - முக்கிய நபர் கைது!