விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகள் ஜெயஸ்ரீ (15). இவர் பத்தாம் வகுப்பு படித்துவந்தார். இன்று இவரது பெற்றோர் வெளியூர் சென்றிருந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிலிருந்து புகை வந்துள்ளது.
இதனைக்கண்ட உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் வீட்டில் சென்றுபார்த்தபோது, அங்கு சிறுமி எரிந்துகொண்டிருந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், உடனே சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார், காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர், திருவெண்ணெய்நல்லூர் ஆய்வாளர் பாண்டியன் உள்ளிட்ட காவல் துறையினர் மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், நடந்த சம்பவம் குறித்து குற்றவியல் நீதித் துறை நடுவர் அருண்குமார் ஜெயஸ்ரீயிடம் வாக்குமூலம் பெற்றார்.